[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ
தமிழில் பயன்படுத்தப்படும்
கிரந்த எழுத்துகள்

ஸ்ரீ அல்லது சிறீ, சிரீ (தமிழில் சீர், சீ, ஆங்கிலம் - Sri, Shri ,Sre, Shre அல்லது Shree, தேவநாகரி - श्री, IAST ஒலிபெயர்ப்பு Śrī) என்றால் செல்வம் எனப் பொருள்படும். வணக்கத்துக்குரிய என்பதைக் குறிக்கும் சமசுகிரத அடைமொழியாகவும், பெருமதிப்புக்குரிய என்பதைக் குறிக்கும் இந்து சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஒரு பெயருக்கு முன்னர் எழுதப்படும் போது ஆங்கிலச் சொல்லான Mr. , தமிழ்ச்சொல்லான திரு. ஆகியவற்றுக்கு ஒத்து விளங்குகிறது.[1][2][3]

எழுத்துவடிவத்தின் தோற்றம்

[தொகு]

ஸ்ரீயின் எழுத்து வடிவத் தோற்றம்

ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து வடிவம் ஶ் என்ற கிரந்த எழுத்தில் இருந்து தோன்றியது ஆகும். ஸ்ரீ என்பது ’ஶ்’, 'ரீ' ஆகியவற்றைச் சேர்த்த கூட்டெழுத்தின் (வடமொழி:संयुक्ताक्षरं - சம்யுத்தாட்சரம்) 'ஈ'கார உயிர்மெய் வடிவம் ஆகும். மேலுள்ள படத்தில் காணப்படும் கடைசி இரு வடிவங்களும் ஸ்ரீயை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஒருங்குறியின் அண்மைய பதிப்பில் ஶ் என்ற கிரந்த எழுத்து தமிழ் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள யூனிகோடு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தும் ஸ்+ரீ-->ஸ்ரீ என்பதற்கு மாறாக, மற்ற இந்திய மொழிகளை பின்பற்றி ஶ் + ரீ --> ஸ்ரீ என எழுத்துவடிவ தோற்ற விதியினை (Glyph Formation Rules) ஒருங்குறி குழுமம் மாற்றி அமைத்துள்ளது. இருப்பினும் ஸ் + ரீ என்ற சேர்க்கையும் எழுத்துருக்களில் ஸ்ரீ என்ற வடிவத்தினை கொடுக்கிறது.

சமயம்

[தொகு]

இந்த எழுத்தை சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். ஸ்ரீ என்பது செல்வதைக் குறிப்பதால் ஸ்ரீதேவி என்னும் பெயர் விட்டுணுவின் துணையும் செல்வத்துக்கான கடவுளும் ஆன இலட்சுமியையும் குறிக்கும். வளத்துக்கு உரிய கடவுளான பிள்ளையாரையும் ஸ்ரீ என்ற பெயர் குறிக்கும். புனிதத் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறவர்களின் பெயர்கள் முன்னும் ஸ்ரீ என்ற சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது. வட மொழி மற்றும் இந்தியத் தோற்றத் தாக்கத்தின் காரணமாக, பௌத்த சமயத்திலும் ஸ்ரீ என்ற சொற்பயன்பாடு காணப்படுகிறது. இந்து சமய நம்பிக்கை உள்ள சிலர் தாங்கள் எழுதும் ஆவணங்களின் தொடக்க வரியின் நடுவே ஸ்ரீ என்று எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இது பிள்ளையார் சுழி, ஓங்காரக் குறி இட்டு எழுதும் வழக்கங்களை ஒத்தது. இந்துக் கடவுளர் பெயர்களுக்கு முன் ஸ்ரீ என்று குறிக்கப்பட்டாலும், தமிழ்ச் சூழலில் இதற்கு மாறாக அருள்மிகு என்று குறிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.

பொதுப் பயன்பாடு

[தொகு]

வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய நபர்களின் பெயருக்கு முன் பெருமதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக, இச்சொல் பயன்படுகிறது. இச்சொல்லைப் பயன்படுத்த பால் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்றாலும், இச்சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணம், ஸ்ரீமதி போன்ற சொற்பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.

மன்னராட்சிக் காலத் தாக்கத்தை ஒட்டி, பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுக்கு, நாட்டிய ஸ்ரீ, சங்கீத ஸ்ரீ, லங்கா ஸ்ரீ போன்ற பட்டங்களைக் குறிப்பிடலாம். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று தொடர்ந்து இரண்டு, மூன்று முறையும் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

வடமொழி வழிப் பெயர்ச்சொற்களில் ஸ்ரீ காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஸ்ரீவித்யா, ஸ்ரீதர், ஸ்ரீராம், ராகஸ்ரீ, ஸ்ரீநிவாசன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

இடப் பெயர்

[தொகு]

வணக்கத்துக்குரிய தீவு என்று பொருள்படும் வகையில் சிறி லங்கா என்ற நாட்டுப் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்ச் சூழல்

[தொகு]

தற்போது தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் கிரந்த எழுத்துக்களில் ஸ்ரீயும் ஒன்றாகும். சில வடமொழி வழிப் பெயர்கள், இந்து, பௌத்த சமய மந்திரங்கள், இச்சமயக் கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிடும் போதும் முன்னொட்டாகவும் இவ்வெழுத்து வடிவம் பயன்படுகிறது. தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ஸ்ரீ என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும், பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் பிற மொழிச் சொற்கலப்பை தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்னும் சொல்லுக்கு இணையான திரு, திருமிகு, அருள்மிகு போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல், எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே திருவரங்கம் என்று குறிக்கப்பட்டு இருப்பதும், திரு + அரங்கம் என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ஸ்ரீ + ரங்கம் என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ஸ்ரீ என்று மொழி மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதப்படவும் வாய்ப்புண்டு.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் சிறீ, சிரீ ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் சிரீ என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

என்று வருவதைக் குறிப்பிடலாம்.

இலங்கையில் ஸ்ரீ என்பதற்கு மாறாக சிறீ என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும் ஒரு காரணமாகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shri". Lexico. Oxford English Dictionary. Archived from the original on October 30, 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
  2. Full inscription, Fleet, John Faithfull (1888). Corpus Inscriptionum Indicarum Vol. 3. pp. 1-17.
  3. Turner, Sir Ralph Lilley; Dorothy Rivers Turner (January 2006) [1962]. A comparative dictionary of the Indo-Aryan languages. London: Oxford University Press. p. 736. Archived from the original on 15 December 2012. பார்க்கப்பட்ட நாள் 22 April 2010. śhrīˊ 12708 śhrīˊ feminine ' light, beauty ' R̥gveda, ' welfare, riches ' Avestan (Iranian) Pali Prakrit sirī – feminine, Prakrit – feminine ' prosperity '; Marāṭhī – s honorific affix to names of relationship (e.g. āj̈ā – s, ājī – s) Jules Bloch La Formation de la Langue Marathe Paris 1920, page 412. – Sinhalese siri ' health, happiness ' (Wilhelm Geiger An Etymological Glossary of the Sinhalese Language Colombo 1941, page 180) a loanword from Pali <-> See addendum śrḗyas –, śrḗṣṭha – . See Addenda: śrīˊ – occurring for the first time in Addenda : śrīparṇī – .
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ&oldid=4106617" இலிருந்து மீள்விக்கப்பட்டது