[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்க்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர்க்காரம் என்பவை கார உலோகங்கள் (உதாரணம்: இலித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபீடியம், சீசியம் போன்றவை) ஐதராக்சைடுகளுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும் சொல்லாகும். ஆல்கலிகள் சிவப்பு லிட்மசை நீல நிறமாக மாற்ற வல்ல வலிமையான காரங்களாகும். இவை அமிலங்களுடன் வினைபுரிந்து நடுநிலையான உப்புக்களைத் தருகின்றன. இவை எரிதன்மையுடையவையாகவும் மற்றும் உயிருள்ள திசுக்களை அரிக்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன. நீர்க்காரம் என்ற சொல்லானது கார மண் உலோகங்களின் (பேரியம், கால்சியம், இசுட்ரான்சியம் போன்றவை) கரையக்கூடிய ஐதராக்சைடுகளையும், மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடையும் கூடக் குறிக்கப் பயன்படுகிறது. உண்மையில் நீர்க்காரம் என்ற சொல்லானது சோடியம் அல்லது பொட்டாசியத்தைத் தரக்கூடிய தாவரங்கள் எரிக்கப்பட்டுக் கிடைக்கும் சாம்பலைக் குறிக்கக்கூடியதாகும்.

நீர்க்காரங்களின் பொதுவான பண்புகள்

[தொகு]

நீர்க்காரங்கள் அனைத்துமே அறீனியசு காரங்களாகும். இவை நீரில் கரைக்கும் போது ஐதராக்சைடு அயனிகளைத் (OH) தரவல்லவை. பொதுவான காரத்தன்மையுள்ள ஆல்கலி நீர்க்கரைசல்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:

  • மிதமான செறிவுடைய கரைசல்கள் (10−3 M க்கும் அதிகமான) 7.1 அல்லது அதற்கும் அதிகமான pH மதிப்பினைக் கொண்டிருக்கக்கூடியவையாகும். இவை பினால்ப்தலீனை நிறமற்ற நிலையிலிருந்து இளஞ்சிவப்பாக மாற்றக்கூடியவை.
  • அதிக செறிவான கரைசல்கள் எரிதன்மை உடையவை (வேதிக்காயங்களை ஏற்படுத்துபவை).
  • நீர்க்கார கரைசல்கள் வழுவழுப்பானவையாகவும், தொடும் போது சோப்பைத் தொடுவது போன்ற உணர்வையும் தரக்கூடியவை. இவை, தோலின் மேற்புறத்தில் உள்ள கொழுப்புத் தன்மையுடைய பொருட்களுடன் சோப்பாக்குதல் வினையில் ஈடுபடுவதன் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது.
  • நீர்க்காரங்கள் இயல்பாக நீரில் கரைபவையாகும். இருப்பினும் பேரியம் கார்பனேட்டு போன்றவை அமிலத்தன்மையுள்ள நீர்க்கரைசல்களில் மட்டுமே கரையக்கூடியவையாக காணப்படுகின்றன.

நீர்க்காரங்கள் மற்றும் காரங்கள் இவற்றுக்கிடையேயான வேறுபாடு

[தொகு]

"காரம்" மற்றும் "நீர்க்காரம்" என்ற சொற்கள் வேதியியல் மற்றும் வேதிப் பொறியியல் தவிர பொதுவெளியில் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்க்காரம் என்ற கருத்துக்கான மேலும் குறிப்பிடப்பட்ட பல்வேறு வரையறைகள் உள்ளன. வழக்கமாக, காரங்கள் என்ற வகைப்பாட்டின் உட்பிரிவாக நீர்க்காரங்கள் வரையறுக்கப்படுகின்றன.

  • கார உலோகம் அல்லது கார மண் உலோகத்தின் காரத்தன்மையுள்ள உப்பு [1] (இந்த வரையறை Mg(OH)2 உள்ளடக்குகிறது. ஆனால், அம்மோனியாவை NH3 விலக்கி வைக்கிறது.)
  • நீரில் கரைந்து ஐதராக்சைடு அயனிகளைத் தரக்கூடிய அனைத்து காரங்களும் நீர்க்காரங்கள் [2][3][4] அல்லது ஒரு காரத்தின் நீர்க்கைரசல் நீர்க்காரம் ஆகும்.[5] (இந்த வரையறை Mg(OH)2 மற்றும் NH3 ஆகியவற்றை உள்ளடக்கியது.)

காரங்களின் இரண்டாவது உட்பிரிவானது அறீனியசு காரம் எனவும் அழைக்கப்படுகிறது.

நீர்க்கார உப்புகள்

[தொகு]

நீர்க்கார உப்புகள் நீர்க்கார உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடுகள் ஆகும். இவற்றில் சில உதாரணங்கள்:

  • “எரிசோடா“ என அழைக்கப்படும் சோடியம் ஐதராக்சைடு, “எரிபொட்டாஷ்“ என அழைக்கப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு
  • கரைசலை மேலே கூறப்பட்ட இரண்டில் ஒன்றுக்கோ அல்லது இரண்டும் கலந்த கலவையுமோ அழைக்கப் பயன்படும் பொதுப்பெயர்
  • கால்சியம் ஐதராக்சைடு; இதன் தெவிட்டிய கரைசல் "சுண்ணாம்பு நீர்" என அழைக்கப்படுகிறது.
  • மக்னீசியம் ஐதராக்சைடு – நீரில் குறைவான கரைதிறனே கொண்டுள்ள நீர்க்காரமாதலால் ஒரு சிறப்பு வகை நீர்க்காரம் (இருப்பினும் கரைந்த பகுதியானது முழுமையான சிதைவின் காரணமாக வலிமையான காரமாக கருதப்படுகிறது)

காரத்தன்மையுள்ள மண்

[தொகு]

7.3 ஐக் காட்டிலும் அதிகமான pH மதிப்பைக் கொண்ட மண்ணானது காரத்தன்மையுள்ள மண் என வரையறுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணானது கார வகை உப்புக்களின் இருப்பினால் தோன்றுகிறது. பல தாவரங்கள் (முட்டைக்கோசு மற்றும் எருமைப்புல் போன்றவை) இலேசான காரத்தன்மை உடைய மண்ணில் நன்கு வளரும் தன்மையைக் கொண்டிருப்பினும், மிதமான அமிலத்தன்மையைக் கொண்ட (pH மதிப்பு 6.0 முதல் 6.8 வரை) மண்ணில் வளரும் தன்மை பெற்ற தாவரங்களுக்கு கார வகை மண் உகந்ததாக இருப்பதில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alkali | Define Alkali at Dictionary.com. Dictionary.reference.com. Retrieved on 2012-04-18.
  2. alkali. Tiscali.co.uk. Retrieved on 2012-04-18. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. alkali – definition of alkali by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia. Thefreedictionary.com. Retrieved on 2012-04-18.
  4. Chung, L.H.M. (1997) "Characteristics of Alkali", pp. 363–365 in Integrated Chemistry Today. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789623722520
  5. Acids, Bases and Salts. KryssTal. Retrieved on 2012-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்காரம்&oldid=2749376" இலிருந்து மீள்விக்கப்பட்டது