[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டிடக்கலைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டிடக்கலை உரையாடல் - இயூசீன் வயலட் லீ டுக்கின் படங்களுடன் கூடிய பிரெஞ்சுக் கட்டிடக்கலை அகரமுதலியில் (1856) இருந்து எடுக்கப்பட்டது.

கட்டிடக்கலைக் கோட்பாடு (Architectural theory) என்பது, கட்டிடக்கலை தொடர்பான சிந்தனை, உரையாடல், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பல கடிடக்கலைப் பள்ளிகளில் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பிக்கப்படுவதுடன், முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். பேச்சு அல்லது உரையாடல், நூல்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்களில் கட்டிடக்கலைக் கோட்பாடுகள் வெளிப்படுகின்றன. பெரும்பாலும் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பித்தல் சார்ந்து காணப்படுவதால் பெரும்பாலான கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர்கள் கட்டிடக்கலைப் பள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவோ அல்லது அங்கேயே பணியாற்றுபவர்களாகவோ உள்ளனர். முகப் பழைய காலத்திலேயே ஏதோ ஒரு வடிவத்தில் கட்டிடக்கலைக் கோட்பாடு இருந்துள்ளது. அச்சுப் பதிப்பு பொதுவான ஒன்றாக மாறிய பின்னர் கட்டிடக்கலைக் கோட்பாடு தொடர்பான செயற்பாடுகள் மேலும் வளம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டில் நூல்களும், இதழ்களும், ஆய்விதழ்களும், முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கட்டிடக் கலைஞர்களினதும், திறனாய்வாளர்களினதும் ஆக்கங்களைப் பெருமளவில் வெளியிட்டன. இதனால் முன்னர் நீண்டகாலம் நிலைத்திருந்த பாணிகளும் இயக்கங்களும், விரைவாக உருவாகி விரைவாகவே இல்லாமல் போயின.

வரலாறு

[தொகு]

பழங்காலம்

[தொகு]

மிகப் பழைய காலத்தில் கட்டிடக்கலைக் கோட்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்த தகவல்களோ அல்லது அதன் இருப்புக் குறித்த சான்றுகளோ போதிய அளவு இல்லை. கட்டிடக்கலைக் கோட்பாடு சார்ந்த மிகப் பழைய ஆக்கமாக கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த விட்ருவியசின் நூலைக் குறிப்பிடலாம். இது போன்ற ஆக்கங்கள் முன்னரும் இருந்திருக்கக் கூடும் எனினும் அவை தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை.

விட்ருவியசு, கிமு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோம எழுத்தாளரும், கட்டிடக் கலைஞரும், பொறியாளரும் ஆவார். உரோமப் பேரரசுக் காலத்தில் வாழ்ந்து இன்றுவரை அறியப்படுபவர்களுள் முன்னணிக் கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர் இவரே. இன்று "கட்டிடக்கலையின் பத்து நூல்கள்" என அறியப்படும் "டி ஆர்க்கிடெக்சுரா" என்னும் நூலை இலத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதினார். பேரரசர் அகசுத்தசுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் கிமு 27க்கும் 23 க்கும் இடையில் எழுதப்பட்டிருக்கலாம்.[1] செந்நெறிக் கட்டிடக்கலை பற்றி எழுதப்பட்டு இன்று கிடைக்கத்தக்கதாக உள்ள ஒரே சமகால நூல் இதுவே. பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூல், நகரத் திட்டமிடல், கட்டிடப் பொருட்கள், அலங்காரங்கள், கோயில்கள், நீர் வழங்கல் போன்ற, உரோமக் கட்டிடக்கலையின் ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகிறது. கட்டிடக்கலை எனக் கருதப்படுவதற்கு அடிப்படையான மூன்று விடயங்களை இந்நூல் முன்வைத்துள்ளது. இவை உறுதி, பயன், மகிழ்ச்சி என்பன. இவை, பொறியியல் அடிப்படையில் போதுமானதாக இருத்தல், செயற்பாட்டு அடிப்படையில் போதுமானதாக இருத்தல், அழகாக இருத்தல் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன எனலாம். விட்ருவியசின் ஆக்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது, மறுமலர்சிக்காலக் கட்டிடக் கலைஞர்களில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியது. ஏற்கெனவே உருவாகிக்கொண்டிருந்த மறுமலர்ச்சிப் பாணிக்கு ஒரு தொல்லியல் அடிப்படையை இது வழங்கியது. மறுமலர்ச்சிக்காலக் கட்டிடக் கலைஞர்களான நிக்கோலி, புரூணலெசுச்சி, லியொன் பட்டிசுட்டா அல்பர்ட்டி ஆகியோர் தமது அறிவுத்துறையை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் கோட்பாட்டை "டி ஆர்க்கிடெக்சுரா"வில் கண்டனர்.

மத்திய காலம்

[தொகு]

மத்திய காலம் முழுவதும், கட்டிடக்கலை அறிவு படி எடுத்தல், வாயால் சொல்லுதல், தொழில்நுட்ப ரீதியாக தலைமைக் கட்டிடக்கலைஞரின் பணியிடத்திலிருந்து அறிதல் என்பவற்றின் மூலமே கடத்தப்பட்டது.[2] படியெடுத்தலில் உள்ள சிரமங்கள் காரணமாக கட்டிடக்கலைக் கோட்பாடு தொடர்பான மிகக் குறைவான ஆக்கங்களே இக்காலத்தில் எழுதப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kruft, p. 447.
  2. Evers, Thoenes, et al., p.13.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடக்கலைக்_கோட்பாடு&oldid=2523202" இலிருந்து மீள்விக்கப்பட்டது